Friday, May 20, 2005

குருவி சொன்ன கதை!

குருவி சொன்ன கதை!!

சுவரிலே மாட்டியிருந்த கடிகாரத்தில், சின்ன குடிசைக்குள்ளிருந்து வெளியே வந்த அழகான குருவி ஒன்று, நேரம் ஒரு மணி என்பதை 'கூ கூ' என்று அறிவித்துவிட்டு மீண்டும் குடிசைக்குள் போய் உட்கார்ந்து கொண்டது. 'அட, அதற்குள் மணி ஒன்று ஆகி விட்டதா?' என்று அகல்யா தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

காலை எழுந்து முற்றம் கூட்டி முடிக்கவே ஒரு மணித்தியாலம் எடுத்தது அகல்யாவுக்கு. அவர்கள் வீட்டிற்கு முன்னால் பெரிய முற்றம். வெள்ளை வெளேரென்று, மிகவும் அழகாக இருக்கும் வெண்மணல் முற்றம். அந்த வீட்டை அப்பா கட்ட நினைத்த போது அந்த வளவு வெறும் பள்ளக் காணியாகத்தான் இருந்தது. அதற்கு செம்மண் வாங்கி கொட்டி நிரப்பி விட்டு, அதன் மேலாக, கடற்கரை மணலும் வாங்கி கொட்டியிருந்தார் அப்பா. பூங்கன்றுகள் வைப்பதற்கு இடம் ஒதுக்கி, அந்த இடத்தில் மட்டும் செம்மண் நிரப்பியபடி விட்டிருந்தார்கள். அகல்யாவும், அம்மாவுமாக இணைந்து அங்கே விதம் விதமான பூக்கன்றுகளை வைத்து, அதற்கு நீர் இறைத்து பராமரித்த நாட்கள் அவளது நினைவில் இன்னும் பசுமையாக உள்ளது.

அகல்யா வாசலுக்கு வந்து முற்றத்தில் இறங்கிப் பார்த்தாள். உச்சி வெயில் அகோரமாக எரித்தது. வெள்ளை மணல் நெருப்பாய் காலில் சுட்டது. அம்மா நெல் அவித்து, முற்றத்திலே பாயில் பரவி இருந்தார். நெல் மணிகளை உண்ண காகம் வந்து விடுமே என்று, நீண்ட தடி ஒன்று காகம் கலைப்பதற்காக சுவரில் சாத்தப்பட்டு இருந்தது. காகம் கலைப்பதே சில சமயம் பெரிய வேலையாக இருக்கும். ஆனால் என்ன அதிசயம்! ஒரு காகமும் அந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை. அவற்றிற்கும் இந்த வெயிலைக் கண்டு பயம் வந்து விட்டது போலும் என்று அகல்யா எண்ணிக் கொண்டாள்.

அப்பா வேலை முடிந்து வருவதற்கு இன்று இரவாகி விடும் என்று கூறிச் சென்றிருந்தார். எனவே அம்மாவும், அகல்யாவுமாக நிதானமாக பல கதைகளும் பேசியபடியே வீட்டு வேலைகளை முடித்து, மதிய சமையலையும் முடித்து, சாப்பிட்டும் ஆயிற்று. அகல்யாவால் நாட்டு சூழ்நிலை காரணமாக ஆறு மாதமளவில் வீட்டுக்கு வர முடியவில்லை. அதனால் அவளுக்கு அம்மாவிடம் சொல்ல நிறைய விடயங்கள் இருந்தது. அவளுக்கு வீட்டுக்கு வந்ததுமே அம்மாவிடம் பல்கலைக்கழகத்தில் நடந்த எல்லா விடயங்களையும் சொல்லி ஆக வேண்டும். அப்பா கூட அவர்களை கேலி செய்வார், "சினேகிதிகளிடம் கூட இப்படி வாய் ஓயாமல்தான் பேசுவாயா?" என்று. அம்மாதான் அவளுக்கு மிக நெருங்கிய சினேகிதி. அதற்குப் பிறகுதான் மற்ற சினேகிதிகள்.

முற்றத்திலே வீட்டில் இருந்து பத்தடிகள் தள்ளி அடர்ந்து படர்ந்த மாமரம். அநேகமாக மதிய உணவை முடித்த பின்னர் அனைவரும் அந்த மாமர நிழலில் வந்து அமர்ந்து கொள்வார்கள். வீட்டுக்குள் இருப்பதை விட இந்த மாமர நிழலில் வந்து அமர்ந்து கொள்ளும்போது கிடைக்கும் சுகமே அலாதியானது. இன்று அவள் வந்து அமர்ந்த சிறிது நேரத்தில் அம்மாவும் அங்கே வந்து அமர்ந்து கொண்டார். இருவரும் மீண்டும் அவள் ஊரில் இல்லாதபோது, ஊரில் நடந்த புதினங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

அப்போது சின்னஞ் சிறிய குருவி ஒன்று அடிக்கடி தங்கள் தலைக்கு மேலாக அந்த மாமரத்திற்கு வந்து வந்து போவதை அகல்யா அவதானித்தாள். எதற்கு அந்த இத் குருவி வந்து வந்து போகிறது என்று குறிப்பாகப் பார்த்தபோதுதான், அங்கே ஒரு குருவிக் கூடு இருப்பதைக் கண்டாள். அதற்குள் குருவிக் குஞ்சுகள் இருக்கிறதா என்று பார்க்கும் ஆவல் ஏற்பட்டது அவளுக்கு. ஆனால் எப்படி பார்ப்பது, அவள்தான் அவ்வளவாய் உயரம் கிடையாதே. கொஞ்சம் தூரமாகப் போய் நின்று எம்பிப் பார்த்த போது, அந்த கூட்டுக்குள் இருந்து வெளிப்பக்கமாக அந்தக் குருவிக் குஞ்சுகள் சின்னஞ்சிறிய அலகுகளை அகலத் திறப்பதைப் பார்க்க கூடியதாக இருந்தது. இன்னும் சிறிது நேரம் போகத்தான் அவளுக்குத் தெரிந்தது, அங்கே வந்து போவது ஒரு குருவி அல்ல, இரண்டு குருவிகள் என்று.

ஒரு குருவி வந்து விட்டுப் போய்க்கொண்டிருக்கும்போதே, அடுத்த குருவி உணவுடன் வந்து குஞ்சுகளுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தது. "அடடே, இவை அந்தக் குஞ்சுகளின் அம்மாவும், அப்பாவுமாகத்தான் இருக்கும்" என்று அம்மாவிடம் சொன்னாள்.
எத்தனை சிறிய குருவிகள், அவைகள்தான் எத்தனை பொறுப்புடன், குழந்தைகளுக்குஉணவூட்டுகின்றன. அம்மா சொன்னார், "அந்த குருவிக்குப் பெயர் பிலாக்கொட்டை குருவி" என்று. பலாக்கொட்டை போலிருப்பதால் பலாக்கொட்டைக் குருவி எனப் பெயர்வந்திருக்கலாம். பலாக்கொட்டை பேச்சுவழக்கில் பிலாக்கொட்டையாகிவிட்டது.

அந்தக் குருவிகள், வந்து வந்து உணவூட்டுவதைப் பார்த்துக் கொண்டு இருப்பதிலேயே, நேரம் கடந்து கொண்டிருந்தது. அப்போது, அகல்யாவின் பெரியம்மாவின் மகன், ரூபன் சைக்கிளில் வந்தான். அகல்யா அக்கா பல்கலைக்கழகத்தில் இருந்து லீவில் வந்திருக்கிறார் என்றால், அவனும் முக்கால்வாசி நேரம், சித்தி வீட்டிலேயேதான் இருப்பான். சகல கதையும் பேசி அரட்டை அடிப்பதில் அவர்களுக்கு நன்றாகப் பொழுது போகும்.

இன்றைக்கு அந்தக் குருவிகளைச் சுற்றிச் சுற்றியே அவர்களது சம்பாஷணை அமைந்திருந்தது. ரூபன் நல்ல உயரம். ஆறு அடிக்கும் மேலே, மெல்லிய ஒடிந்துவிடுவது போன்ற உடல் அமைப்பு. அகல்யா கூட அவனைக் கேலி செய்வாள், "எலும்புக்கு மேல் தோலைப் போர்த்தி வைத்திருக்கிறாயா?" என்று. பதிலுக்கு அவனும் அகல்யாவை, "குண்டுப் பூசணிக்காய்" என்று கேலி செய்வான். கொஞ்சம் எட்டிப் பிடித்தால், அவனுக்கு அந்தக் குருவிக்கூடு எட்டும் உயரத்திலேயே இருக்கிறது. அவனும் அந்தக் குஞ்சுகளைப் பார்ப்பதற்காக, அந்தக் கூடு இருந்த கிளையைப் பிடித்து, மெதுவாக கீழ் நோக்கி இழுத்து உள்ளே எட்டிப்பார்க்க முயன்றான்.

எங்குதான் இருந்தனவோ அந்தக் குருவிகள். இரண்டும் விரைவாகப் பறந்து வந்து ரூபனைச் சுற்றிச் சுற்றி பறந்த படி 'கீ கீ கீ' என்று கத்தின. கிளையைவிட்டு விட்டு ரூபன் பதறினான். அகல்யாவும், அம்மாவும் கூடப் பதறித்தான் போனார்கள். அந்தக் குருவிகள் இரண்டும் பறந்த வேகமும், கத்திய கத்தலும், அவை எத்தனை கோபமாக இருக்கின்றன என்பதை காட்டின. அவை ரூபனைக் கொத்திவிடுவன போல இருந்தன. அந்தக் கத்தலுக்கு அகல்யா பயந்தே போனாள். தங்களது குஞ்சுகளைப் பிடிக்கப் போகின்றான் என்று நினைத்துத்தான் அவை அத்தனை கத்தல் போட்டன. நல்ல வேளையாக, சிறிது நேரம் கத்தி விட்டு, அவை ரூபனை விட்டு அகன்றன."

குருவிகள் அகன்று விட்டனவே என்றுவிட்டு, மீண்டும், அவை என்ன செய்கின்றன என்று மூவருமாக கவனித்துக் கொண்டிருந்தார்கள். அதன் பின்னர் அந்தக் குருவிகள் இரண்டும் உணவு கொண்டு வருவதை நிறுத்தி விட்டு, சுற்றிச் சுற்றி வந்து கத்திக் கொண்டிருந்தன. கூட்டுக்கு அருகில் சென்று அமர்வதும், கத்துவதும், மீண்டும் தூரமாகச் சென்று வேலியுடன் இருந்த நாவல் மரத்தில் அமர்வதுமாக இருந்தன.


'இவை ஏன் குஞ்சுகளுக்கு உணவு கொண்டு வருவதை நிறுத்திவிட்டன, ஏன் சுற்றிச்சுற்றி கத்திக் கொண்டே இருக்கின்றன' என்று அகல்யாவும், ரூபனும் திகைத்துப் போயிருந்தார்கள். மிகவும் கவலையுடன் அந்தக் குருவிகளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ரூபனுக்கு, 'தன்னால்தானே இப்போ அந்தக் குருவிக் குஞ்சுகளுக்கு உணவு கிடைக்கவில்லை' என்று ஆதங்கமாக இருந்தது. என்ன செய்வது என்றே புரியவில்லை. அம்மா மட்டும் எதையோ உணர்ந்தவராக, எதுவும் பேசாமல் மெளனமாகவே இருந்தார்.

இப்படியே சில நிமிடங்கள் கரைந்தது. அந்தக் குருவிக் குஞ்சுகளும் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்தன. அவற்றுக்கு பசியாகவும் இருக்கலாம். என்ன செய்வது என்று புரியாத நிலையில், குருவிக்குஞ்சுகளுடன் சேர்ந்து அகல்யாவும் ரூபனும் கூட துடித்துக் கொண்டிருந்தார்கள்.

என்ன ஆச்சரியம் கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் கடந்த பின்னர் ஒரு குருவிக் குஞ்சு மெதுவாக வெளியே பறந்து வந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாக அந்த மாமரக் கிளைகளில் பறந்து பறந்து உட்கார்ந்தது. அப்போது, அந்த குருவிகள் நாவல் மரத்துக்கு தூரமாக போக, குஞ்சும் அங்கேயே பறந்து, அவர்களுடன் இணைந்து உட்கார்ந்து கொண்டது. அதற்குப் பிறகு ஒரு குருவி, அந்தக் குஞ்சைக் கூட்டிக் கொண்டு பறந்து பறந்து தூரமாகச் செல்ல ஆரம்பித்தது. மற்ற குருவி, தொடர்ந்தும், மற்ற இரு குஞ்சுகளையும் வெளியே பறக்கச் செய்யும் முயற்சியில் இருந்தது.

'அதுதான் அம்மாக் குருவியோ?' என்று அகல்யா நினைத்துக் கொண்டாள்.இப்படியே மேலும் ஒரிரு மணி நேரம் ஓடி முடியும்போது, மற்ற இரு குஞ்சுகளும் கூட மெதுவாக கிளம்பிப் பறக்க ஆரம்பித்தன.

ஆபத்து என்று உணர்ந்த பின்னர், அந்தக் குருவிகள் எத்தனை சாமர்த்தியமாக அந்த குஞ்சுகளை தம்முடன் அழைத்துச் சென்று விட்டன என்று நினைக்கையில் ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது அகல்யாவுக்கு. 'குஞ்சுகளுக்கு உணவைக் கொடுக்காமல் ஏன் இந்தக் குருவிகள் குஞ்சுகளைத் தண்டிக்கின்றன?' என்று எண்ணி நொந்து கொண்டிருந்த அகல்யாவுக்கு, இப்போதுதான் அந்தக் குருவிகளின் சாதுர்யம் புரிந்தது. இந்தச் சிறிய குருவிகளுக்கு இத்தனை புத்திசாலித்தனமா? வியப்பாகத்தான் இருந்தது அவளுக்கு.

'உணவு கொடுக்காமல் குஞ்சுகளைப் பட்டினி போட்டாலும், அவை ஆபத்து என்று உணர்ந்த இடத்தில் இருந்து, குஞ்சுகளை எப்படியோ கூட்டிச் சென்றுவிட்டனவே? ''நமது பெற்றோர்கள்கூட நமக்கு கஷ்டமாக இருக்கும் சில விடயங்களைச் செய்யச்சொல்லி வற்புறுத்துவது நமது நன்மைக்காகத்தானே?' என்று அகல்யா தனக்குள் எண்ணிக் கொண்டாள்.

அம்மா மட்டும், மெதுவாக புன்னகை புரிந்தபடியே அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். 'இப்படித்தான் நடக்கப் போகிறது என்பது முதலிலேயே அம்மாவுக்குப் புரிந்திருந்ததோ? இதுதான் அனுபவம் அம்மாவுக்கு தந்திருக்கும் முதிர்ச்சி போலும்' என்று அகல்யா தனக்குள் எண்ணிக் கொண்டாள்.

'நேரம் போனதே தெரியவில்லை. இனியாவது எழுந்து வீட்டு வேலைகளைப் பார்ப்போம்' என்று சொன்னபடியே அம்மாவீட்டினுள் சென்றார். அகல்யாவும், ரூபனும் பிரமிப்பிலிருந்து மீளாமல் குருவிகள் சென்ற பாதையையே பார்த்துக் கொண்டு, எதுவும் பேசத் தோன்றாமல் அமர்ந்திருந்தார்கள்.